Templates by BIGtheme NET

ஆர்.கே நகர் இடைதேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் கணிப்பு

ஜோதிடக்கலையின் மூலம் ஒருவரின் வாழக்கையில் நடக்கப்போடும் கணித்து சொல்லும் பல ஜோதிடர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் நம் நாட்டில் வருங்காலத்தில் நடக்கப்போகும் பல விஷயங்களை உலகிற்கு முன்கூட்டியே அறிவித்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சேலத்தை சேர்ந்த ஜோதிட வல்லுநர் திரு.பாலாஜி ஹாசன் அவர்கள், நமது ரிலாக்ஸ் ப்ளீஸ் இணையதளத்திற்கு நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து வழங்கிய பிரத்யேக கணிப்பு உங்களுக்காக.

முதலில் உங்களை பற்றி சொல்லுங்கள் பாலாஜி ஹாசன், எப்படி உங்களுக்கு ஜாதகம் ஜோதிடம் குறித்த ஆர்வம் ஏற்பட்டது?

நான் 2013 ஆம் ஆண்டு படிப்பை முடித்த மெக்கானிக்கல் இஞ்சினியர் நான் கல்லூரி முதலாம் ஆண்டில் படிக்கும்போது என் கல்லூரிக்கு அருகில் கேரளாவிலிருந்து அருள்பிரகாசம் என்ற ஜோதிடர் அரியலூருக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் வந்து ஜோதிடம் பார்பார். அவரை சந்திக்க அன்று மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருப்பதை பார்த்தேன். ஒரு ஆர்வ மிகுதியில் அவரை நான் சந்திக்க சென்றேன்.

அவர் என்னை பற்றி அத்தனை விடயங்களையும் மிகத் துல்லியமாக கூறினார். குறிப்பாக என் வீட்டில் ஏற்பட்ட துர்மரணங்கள், என் உடலில் உள்ள அங்க அடையாளங்கள், நான் சிறுவயதில் காணாமல் போய் மீண்டும் கிடைத்தது, நாய் துரத்தி கிணற்றில் விழுந்து ஒரு பெரியவரால் காப்பாற்றப்பட்டது உள்ளிட்ட என் வாழக்கையில் நான் மட்டுமே அறிந்த பல ரகசியங்களை கூறினார், அது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஜாதகத்தின் மூலம் இதையெல்லாம் எப்படி சொல்ல முடியும் என்று ஏற்பட்ட ஆர்வத்தில் அவரிடம் எனக்கு ஜாதகம் கணிக்க சொல்லித்தர வேண்டும் என்று நான் கேட்டேன். மதிப்பிற்குரிய அருள்பிரகாசம் ஐயா அவர்கள் நீ கேரளாவிற்கு வா உனக்கு ஜாதகம் கணிக்க சொல்லித்தருகிறேன் என்று எனக்கு பயிற்சியளிக்க சம்மதித்தார். அதன் பிறகு 3 வருடம் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் நான் பாலக்காட்டிற்கு ரயிலேறி ஞாயிற்றுக்கிழமை பாடம் படித்து வந்தேன். பிறகு ஐயா அவர்கள் சேலத்திற்கு வரும்பொழுது எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தீட்சை வழங்கினார்.

நீங்கள் ஜாதகம் மட்டும் கணிக்கிறீர்களா இல்லை பிரசன்னமும் பார்கிறீர்களா?

நான் ஜாதகம் மட்டுமல்லாது பிரசன்னமும் கணிக்கிறேன். பிரசன்னத்தின் அடிப்படையில் தான் ஒருவரது ஜாதகத்தை பார்க்காமல் பல்வேறு விஷயங்களை கூற முடியும். பிரசன்னத்தின் மூலம் தான் சமீபத்தில் கலைஞர் கருணாநிதி மரணமடைந்தார் என்று வதந்தி பரவியபொழுது இல்லை அவர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்தேன். அதே போல் கடந்த தேர்தல் குறித்த பல விஷயங்கள், திரு நரேந்திர மோடி அவர்கள் விலையுயர்ந்த கோட் விஷயத்தில் விமர்சிக்கப்பட்டு அதை எலம்விடுவார்கள் என்று கணித்தது, அதே போல் மம்தா பேனர்ஜி அவர்கள் ஒரு பிரச்சனையில் சிக்கி மீண்டு வருவார்கள் என்று கணித்தது, திரு மாஃபா பாண்டியராஜன் அவர்கள் ஒ.பன்னீர்செல்வம் பிரிந்த போது அவருக்கு எதிராக பேட்டி வழங்கியபோது இவர் இன்னும் இரண்டு நாட்களில் ஓபிஎஸ்சுடன் இணைவார் என்று தெரிவித்தேன் இப்படி பல்வேறு விஷயங்களை பிரசன்னத்தின் மூலமாகவே கணிக்க முடிகிறது. பெரும்பாலும் ஆருடத்தின் மூலம் சராசரியாக பத்தில் எட்டு விடயங்களை என்னால் சரியாக கணிக்க முடியும்.

இப்போது கூட ஆர்.கே. நகர் தேர்தல் குறித்த கணிப்புகளை கூட பிரசன்னத்தின் அடிப்படையிலேயே தான் கூறப்போகிறேன்.

பிரசன்னம் கணிப்பதற்கு எப்படிப்பட்ட தகவல்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது?

பிரசன்னம் கணிப்பதற்கு இரண்டே விடயங்கள் தான் தேவை, கேட்கக்கூடிய நேரம், நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது கேட்கக்கூடிய நேரத்தில் இன்றைய லக்கினத்தில் கோச்சாரப்படி என்ன கிரகங்கள் இருக்கிறது, நீங்கள் கேட்கக்கூடிய அம்சத்தில் என்ன கிரகங்கள் இருக்கிறது, நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகள் இதுகுறித்து என்பது போன்ற விஷயங்கள் மூலம் கணிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போய்விட்டது என்று ஒருவர் என்னிடம் பிரசன்னம் கேட்பாரானால் அவர்கள் கேட்ட நேரத்திற்கு லக்கினம் எங்கிருக்கிறதோ அந்த திசையில் அந்த குழந்தை இருக்கும். அந்த லக்கினம் நீச்சமாக சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமாகி இருந்தால் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டது என்று அர்த்தம். கேட்கப்பட்ட நேரத்தின் லக்னாதிபதிக்கு முன்னும் பின்னும் ராகு, கேது, சனி போன்ற தீய கிரகங்கள் இருந்தால் அந்த குழந்தை ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறது என்று அர்த்தம். ராகுவோடு லக்னம் சேர்ந்திருந்தால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது போன்று பல்வேறு விஷயங்களை கணிக்க முடியும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள்? அதுகுறித்து உங்கள் கணிப்பு என்ன?

இந்த தேர்தல் மிக சவாலான தேர்தலாகும் இதில் வெற்றி பெறுபவர்கள் மிக சொற்பமான ஒட்டு வித்யாசத்திலேயே வெற்றிபெறுவார்கள் என்னுடைய கணிப்பின் படி இந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மருது கணேஷ் மிகக் குறைவான ஒட்டு வித்யாசமான 1500 முதல் 2500 ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். இந்த தேர்தலில் திமுக – 35 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றியடையும்.

இரண்டாம் இடத்தை பிடிப்பதற்கான போட்டி மதுசூதனனுக்கும் டிடிவி தினகரனுக்குமிடையே கடுமையாக இருக்கும், ஆனாலும் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தை பிடிப்பார், மூன்றாம் இடத்தை மதுசூதனனும் நான்காம் இடத்தை நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயமும் பெறுவார்கள். ஐந்தாம் இடத்தை பாஜக பிடிக்கும். இந்த தேர்தலில் பாஜக டெப்பாசிட் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

திமுகவின் மருது கணேஷ் 70,000 – 80,000 ஓட்டு வரை பெறுவார், இவருக்கு அடுத்ததாக டிடிவி தினகரன் 60,000 – 68,000 ஓட்டுகளை பெறுவார், மூன்றாவதாக மதுசூதனன் 58,000 – 65,000 ஓட்டுகள் வரை பெறுவார்

இந்த தேர்தலில் நோட்டாவிற்கு 8% – 11% வரை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தீர்க்கமாக கூறி முடித்தார் திரு பாலாஜி ஹாசன்.

குறிப்பு :- ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் இந்த பெட்டிக்கு இடையிலேயே நமக்கு பல ஆருடங்களை கூறினார். அவர் சொன்னதில் சராசரியாக 90 சதவிகிதம் சரியாக அமைத்து மிகவும் ஆச்சர்யமாகும்.

திரு பாலாஜி ஹாசனின் முகநூல் முகவரி – https://www.facebook.com/balajihaasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*